மற்றவர்களிற்கு காரணங்களை கொடுங்கள்

உறவினர் ஒருவர் ஒரு குடும்ப நிகழ்விற்க்காக viber குரூப் இலே ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். எல்லோரும் பதிலை அளித்தால் மட்டுமே அந்த நிகழ்வு சாத்தியமாகும் என்பதான ஒரு வேண்டுகோள் அது. பல நாள் கழித்தும் ஒருவரும் பதில் அளிக்கவில்லை. வழமையாக அவர் குடும்ப நிகழ்வுகளிட்கு அழைத்தால் எல்லோரும் தவறாமல் போவார்கள். அவர்களையும் தங்கள் குடும்ப நிகழ்வுகளிட்கு அழைப்பார்கள். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு பதிலும் அளிக்காமல் இருப்பது அசாதாரணமானது மட்டுமல்ல, மரியாதை இல்லாத மாதிரியாக இருந்தது.

பொதுவாக மனிதர்கள் நல்லதோ கெட்டதோ தேவைக்கு அதிகமாக எதையும் செய்ய போவதில்லை. பெரும்பான்மையானவர்கள், தங்கள் வாழ்வில் குறுக்கிடாதவரை கெட்டவர்களை தட்டிகேட்பதும் இல்லை; தங்கள் நலத்திற்கு பயன்படாத நல்லவர்களை பெரிதாக தூக்கி வைக்கபோவதும் இல்லை.

வலுவான காரணங்கள் இல்லாவிட்டால் உறவுகளும் நட்புகளும் ஒரே இடத்தில வைத்து தான் மனிதர்களால் பார்க்கப்படுகிறது. சமூகம் ஒரு எழுதப்படாத சட்டத்தை தங்களை அறியாமல் பின்பற்றுவது போலத் தான். குடும்ப நிகழ்வுகள், இன்ப துன்பங்களில் பங்கு பற்றுவது, பங்கு பற்ற இயலாமல் போனால் சம்மந்தப் பட்டவர்களிடம் அதற்கான காரணத்தை அறியத் தருவது, நெருக்கமானவர்களின் நடப்புகளில் ஆர்வம் காட்டுவது, சொன்ன சொல்லை காப்பாற்ற முயற்சி செய்வது, உதவி செய்ய தயாராய் இருப்பது போன்றவை எல்லாம் சாதரணமாக நாம் பின்பற்றும் நடைமுறைகள்.

தங்களை அறியாமலே மனிதர்கள் இவற்றை வைத்து சக மனிதர்களை எடை போட்டுகொள்கிறார்கள். தன்னை பற்றி மற்றவர் வைத்திருக்கும் விம்பத்திற்கு அதிகமாக ஒருவர் மற்றவர்களிடம் எதையும் எதிர் பார்க்கும்போது, சமூகம் பொதுவாக அதை கொடுக்க தயாராய் இருப்பதில்லை.

இது நல்லதா கெட்டதா என்பது வேறு கதை. சாதூரியமாக மனிதர்களின் இந்த குணத்தை தங்கள் நலனிற்கு பயன்படுத்துவபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் தான்.  உண்மையிலே அக்கறை எதுவும் இல்லமால் மற்றவர்களின் பார்வையில் நல்ல பெயரை எடுக்க கவனமாக மனிதர்களை கையாளுபவர்கள் அவர்கள். இப்படியானவர்கள் இருப்பதால் தான் துரோகம் சாத்தியமாகிறது.

அவர்களை அடையாளம் காண்பது ஒரு வாழ்க்கை கலை.

ஆனால் முதற் பந்தியில் சொன்ன நபர் அப்படியானவர் அல்ல. அவர் பொதுவாக மற்றவர்களை அலட்சியப் படுத்தும் வகையில் நடந்து கொள்வார். தனக்கு ஒரு நியாயம் மற்றவர்களிற்கு இன்னொன்று போல இருக்கும் அவர் நடவடிக்கைகள். வார்த்தைகளை அள்ளி விடுதல், சொன்னதை செய்யாமல் விடுதல் அவருக்கு மிக சாதரணமான விடயங்கள்.

இப்போது யோசிக்கும்போது விளங்குகிறது. மற்றவர்கள் அவருக்கு ஒரு இடத்தை கொடுத்திருகிறார்கள், அதற்கு கூடுதலாக அவர் எதையும் எதிர்பார்த்தால் அதை கொடுக்க அவர்கள் தயாராய் இல்லை.

நாம் சமூக விலங்குகள் (social animals) சக மனிதர்கள் நெருக்கம் என்பது எமது ஒரு உளவியல் தேவை. அதனால் தான் தனிமை சிறை (solitary confinement) கடுமையான தண்டனையாக கருதப் படுகிறது. நல்ல உறவுகளை கட்டி எழுப்புவது ஒரு முதலீடு போல.  வலுவான உறவு வட்டம், ஒரு மனிதனை வாய்ப்பு வளம் மிக்க (resourceful) ஒருவராக மாற்றுகிறது. ஒரு ஆரோக்கியமான உறவு, நட்பு வட்டம் ஒருவனால் செய்யகூடியவற்றை விரிவாக்கிறது.

உங்கள் நெருக்கமானவர்களிட்கு உங்களை மதிக்க, உங்களில் அக்கறை செலுத்த காரணங்களை கொடுங்கள், இதய சுத்தியுடன் அவர்களின் வாழ்க்கையில் பங்கு கொள்ளுங்கள்.

 

Leave a Reply