இது ஒரு போர்க்களம்

பதின்ம வயதில் அனுபவத்தால் அறிந்தது என்பது சொற்பமாக இருந்த போது வாழ்க்கை என்பது ஒரு சொர்க்க பூமியாக தெரிந்தது. அந்த வயதில் சிந்தனைகள் எல்லாம் இந்த வாழ்க்கையை அனுபவிக்க எவை எவை தேவை  அதை எப்படி அடையலாம் என்பதை மையப்படுத்தியே இருந்தது.

அனுபவம் என்பது சிறந்த ஆசான்; படிப்பித்த முக்கிய பாடம் வாழ்க்கை ஒரு போர்க்களம் என்பது தான்.

எத்தனையோ காரணங்களை அடுக்கி கொண்டு போகலாம். இரண்டு வாதாட முடியாத புள்ளி விபரங்கள்.

1. உலகில் 795 மில்லியன் மனிதர்கள் போதிய உணவில்லாமல் வாழ்கிறார்கள்.

2. ஒவ்வொரு நாளும் 66 மில்லியன் குழந்தைகள் பசியுடன் பாடசாலைக்கு செல்கிறார்கள்.  இது பத்து குழந்தைகளில் ஒன்று இற்கு சமமானது.

ஆனால் மனிதன் கையில் இன்று இருக்கும் வளங்கள் இந்த உலகை தாராளமாக பட்டினி இல்லாமல் வைத்திருக்க முடியும்.

மனிதனின் தொழில்நுட்பத்தின் கணிசமான பகுதி போர்களிலும் பூலோக அரசியல் காய் நகர்தல்களிலும் வீணடிக்கப் படுகிறது.
அதீத பணமும் செல்வாக்கும் கொண்ட ஒரு மிக சிறிய ஒரு கூட்டம் தமது நிலையை தக்க வைப்பதற்கான செய்யும் கைங்கரியங்களே இன்றைய உலகின் நிஜம் என்று சொன்னால் மிகையாகாது.

உலகின் பெரும்பாலான போர்களும் தீர்க்க முடியாத சமுக சிக்கல்களும் இவ்வாறான மனிதர்களால் நீண்டு கொண்டே போகின்றன.

மதம், இனம். தேசியம் என்ற வட்டங்களிட்குள் நின்று சிந்திக்கும் சராசரி மனிதர்களை சக்தி வாய்ந்தவர்கள் இலகுவாகக் கையாள்கிறார்கள்.

இது ஒரு பூந்தோட்டம் அல்ல.

ஒரு போர்வீரனின் மனநிலையில் இல்லாவிட்டால் இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நாமும் ஒரு புள்ளி விபரமாகவே இருந்து போவோம்.

ஒரு போர்வீரன் எப்போதும் ஆயத்தமாய் இருப்பான்; சந்தோசத்தை அளவோடு அனுபவிப்பான்; ஓய்வான நேரத்தில் தயார் படுத்துவான்; தன் உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பான்.

இறப்பின் சாத்தியம் கண் கூடாக தெரியும் போது, அதை வெல்வது எப்படி என்பது தான் ஒரே ஒரு அர்த்தமுள்ள நோக்கமாக இருக்க முடியும்.

யுத்தத்தில் பயன் படாத ஒவ்வொரு சிறிய பொருளும் தோற்பதட்கான ஒரு காரணியாக அமையக்கூடும். அதீத உணர்ச்சி – கோபமோ, கவலையோ விரக்தியோ யுத்தத்தில் உனக்கு எதிராகவே செயல்படும்.

இந்த வாழ்க்கை ஒரு யுத்தம்; ஒரு கண்ணிற்கு புலப்படாத எதிரியுடன் ஓர் போர்.  அறிவுரை கூறுவது எளிது தான் ஆனால் வெற்றி என்பது என்ன?

வாழ்கையை எப்படி வெற்றி கொள்வது?

Circle of Influence என்ற பதம் Steven Covey எழுதிய Seven Habits of Highly Effective People என்ற புத்தகத்தில் வருகிறது.

சுருக்கமாக : உங்கள் வாழ்க்கை எத்தனை பேர்களின் வாழ்க்கையை பயன்பெற/பாதிக்க வைக்கிறது என்று அர்த்தம் கொள்ள முடியும்.

இன்று பில் கேட்ஸ் தனது சொத்தின் மிகப் பெரிய பகுதியை வறிய நாடுகளில் வாழும் மக்களின் முன்னேற்றதிட்காக பயன் படுத்துகிறார். ஒரு தனி மனிதன் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துகிறார். அவருடைய Circle of Influence  மிகப் பெரியது.

பணம் மட்டும்தான் Circle of Influence  ஐ பெரிதாகும் என்றில்லை. சே குவேர தொடக்கம் பிரபாகரன் வரை; மாவோ தொடக்கம் பெரியார் வரை வேறு வழிகளால் பெரிய தாக்கங்களை மனிதர் வாழ்வில் கொண்டுவந்தர்வர்கள் அவர்கள்.

ஆனால் எல்லோரும் பில் கேட்ஸ் ஆகவோ நெல்சன் மண்டேலா ஆகவோ முடியாது. ஆனால் ஆகக் குறைந்தது எமது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதன் மூலம் எமது குடும்ப வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

என்னை பொறுத்தவரையில்  மேல் தட்டு வர்க்கத்தில் பிறக்கும் வாய்ப்பு வராத எவரும் இதை தான் குறிகோளாக வைக்க வேண்டும். இது ஒரு போர்; Circle of Influence  ஐ விரிவாக்குவதே வெற்றி.

ஆனால் எம்மில் பலர் எமது முயற்சியின்/பணத்தின் பெரும் பகுதியை மற்றவர்களை கவருவதில் தான் செலவு செய்கிறார்கள். ஏன் ஒரு ஆண் குழந்தை பிங்க் (pink) நிற உடை அணிய கூடாது? விடை தெரியாது; ஆனால் நாங்கள் எல்லோருமே அதை வெகு சிரத்தையாக பின் பற்றுகிறோம்.

valentines day வாழ்த்து சொல்லும் எவரும் தொழிலாளார் தின வாழ்த்து சொன்னதாக நினைவில்லை.

America வில் Black Friday என்று ஒரு நாள் நவம்பர் இல் வரும்; எல்லா கடைகளும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வார்கள்.  இந்த செய்தியின் படி Amazon founder Jeff bezos இன் சொத்து $100 billion ஐ தாண்டி இருக்கிறது இந்த Black Friday ஒரு நாள் வர்த்தகத்தால்.

தனக்கு அத்தியாவசிய தேவையில்லாத பொருளை  Black Friday அன்று வாங்கிய ஒவ்வொரு நடுத்தர வர்க்க மனிதனின் வியர்வையே அந்த $100 billion இற்கு பங்களிப்பு செய்திருக்கிறது.

அது ஒரு உதாரணம் மட்டுமே. இதை போல் பல உதாரணங்கள் சொல்ல முடியும்.

தேவையற்ற பொருள் யுத்தத்தில் வெற்றி தராது.

 

5 Responses

Leave a Reply