அவ்வளவு கேவலமாகப் போனோமா?

சைவம் சொல்லும் மாயை என்பது எங்கள் சாதாரண வாழ்க்கையில் பயன் படுத்தக் கூடிய தத்துவம்.
வாழ்க்கை பற்றிய உண்மை என்பது பல அடுக்குகளாக உள்ளது.

1. நாம் அன்றாடம் உரையாடும் பார்க்கும் மனிதர்கள் பற்றிய உண்மை. சிரிப்பு சிநேகம், கோபம், கர்வம் காண்பிக்கும் அந்த மனிதர்கள் உள்ளே இருப்பது என்ன என்ற உண்மை. அந்த உண்மையை அறிவது எளிதல்ல என்பதால் தான் துரோகம் என்பது சாத்தியமாகிறது. நம்பினால் தான் துரோகம் சாத்தியம். ஒரு துரோகம் நடக்கும் பொது உண்மை வெளி வருகிறது மாயை மறைகிறது.

2. இரண்டாவது உண்மை சமூகம் பற்றியது. அரசியல், மதம், தேசியம் இவற்றை அறை கூவுபவர்களின் நோக்கம் என்ன? மக்கள் சேவையா இல்லை சுயநலமா?
இந்த உண்மை அறிவது கடினமானது. அதனால் தான் உலகத்தில் ஏற்றத் தாழ்வுகள், வறுமை, போர் எல்லாமே. கல்வி இந்த மாயையை போக்கும் ஓர் ஆயுதமாய் இருந்தாலும், கற்றவர்களும் இந்த மாயையின் பிடியில் வாழ்வது வருத்தத்திற்கு உரியது.

3. மூன்றாவது வாழ்வு பற்றிய உண்மை. நாம் யார். உண்மையில் இறைவன் இருக்கின்றானா? இறப்பு உண்மையில் ஒரு முடிவா? ஏன் வாழ்வு பலரிற்கு கொடுமையாக வாய்க்கிறது? இதை மனித வாழ்வின் கடைசி உண்மை (ultimate truth) என்று சொல்லலாம்.

ஆன்மிக தெளிவு உள்ளவர்கள் இந்த உண்மையை அறிந்தவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், இதுதான் கேள்வி என்று அறிந்தவர்கள். அந்த பதிலின் தேடலின் மூலம் ஆழமான ஒரு பார்வை உள்ளவர்கள். அர்த்தமற்றது அனைத்துமே என்பது தான் ஆன்மிக தேடலின் ஒரு பதிலாக இருக்க கூடும். ஆன்மிக தெளிவு என்பது எல்லோருக்கும் இலகுவாக கிடைக்கக் கூடியது அல்ல.

ஆனால் இன்று…..

ஒரு வீடியோ வாட்சப் வழியாக வந்தது.  சந்நியாசினி என்று தம்மை அறிமுகப்படுத்தி காவி உடை தரித்த சில பெண்கள், ஆண்டாள் பற்றிய கருத்து தெரிவித்தவர்கள் பற்றி மிக கேவலமான முறையில்  தனிபட்ட ரீதியாக பலரை தாக்கி  கதைத்திருந்தார்கள்.

வேடம் போட்டு எம் சமூகத்தை ஏமாற்ற ஆடை மட்டும் போதும் ஆடைக்கேற்ற பண்பு என்ற நடிப்பு எல்லாம் தேவையற்றது, என்பதை வேடதாரிகள் உணர்ந்து விட்டார்களா? இது தான் மிகக் கவலைக்குரிய விடயம்.

 

One Response

Leave a Reply