நாங்களும் அவர்களும்

தூத்துக்குடியில் பல உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படிருகிறது. வழமை போலவே பலரது அனுதாப வார்த்தைகளிட்கு மத்தியில் போராட்டம் செய்தவர்களை குற்றம் சாட்டும் குரல்களும் அங்காங்கே உரக்க ஒலிக்கின்றன, வலியவன் பக்க நியாயங்களை முன் வைப்பது தான் இந்த குரல்களின் பொதுவான ஒரு அம்சம்.

இது தூத்துக்குடி பிரச்சினையில் மட்டுமல்ல, ஈழப் பிரச்சினையில் சிங்கள தரப்பு அனுதாபிகளாகவும், காவிரி பிரச்சினையில் கன்னட தரப்பு அனுதாபிகளாகவும், இந்தி திணிப்பு என்று வரும்போது மத்திய அரசு அனுதாபிகளாகவும் இந்த குரல்கள் எம்மிடையே இருந்து ஒலித்து கொண்டு இருக்கிறது.

ஒரு சிங்களவனாக, கன்னடனாக, இந்தி பேசும் தேசியவாதியாக நீ ஏன் மாற வேண்டும்? ஒவ்வொரு இனமும் தன் இருப்பை தக்க வைக்க தன்னாலான முயற்சியை செய்து கொண்டு தான் இருக்கிறது. நீ ஏன் அவன் வேலையை செய்கிறாய்?

இப்படி கதைப்பவர்கள் ஒன்றை மறக்கிறார்கள், இந்த உலகம் இன்றும், நாங்களும் அவர்களும் (us vs them) என்ற அடிப்படையை விட்டு மாறவில்லை.

ஏறத்தாள எல்லா நாடுகளின் எல்லைகளும் மொழி/இன அடிப்படையில் தான் வகுக்கப்பட்டிருகிறன. பல இனம் உள்ள நாடுகள் கூட, சிறுபான்மை இனத்திற்கென விசேட ஒழுங்கமைப்பு செய்யாத பட்சத்தில் அமைதி என்பது தற்காலிகமானதாக தான் இருக்கிறது. நீறு போர்த்த நெருப்பு என்பார்களே அதைப்போல.

ஸ்பெயின் கடோலினா பிரச்சினை, அமெரிக்க கருப்பர்கள் பிரச்சினை, மத்திய கிழக்கு சன்னி/ஷியா பிரச்சினை, பாலஸ்தின பிரச்சினை என்று அடுக்கி கொண்டே போகலாம். அமைதியாக இருந்து இடையிடை எரிமலை போல குமுற ஆரம்பிக்கும்.

இதைதான் ஆங்கிலத்தில் சொல்வார்கள் Good fences make good neighbors என்று. “நல்ல வேலிகள் நல்ல அயலவரை உருவாக்கும்.”

இனம்/மொழி/மதம் மட்டும் எங்களை பிரித்து வைப்பதில்லை, வர்க்க/தொழில் பேதம் அடுத்த தீர்க்கமான ஒரு பிரிவினை.

மேலைத்தேய மக்களாட்சியில் இந்த வர்க்க பேதம் தெளிவாக தெரியும். வலது சார் கட்சிகள் பொதுவாக முதலாளிகள்/வர்த்தக சார்பு கொள்கை கொண்டவையாக இருக்கும், அதே நேரம் இடது சாரி கட்சிகள் தொழிலாளார் மற்றும் வறுமையான மக்கள் சார்பான கொள்கைகளை முன்னெடுக்கும்.

ஒவ்வொரு கூட்டமும் தனது நலனை முன் வைத்து தான் செயல்படுகிறது. ஊழல் மற்றும் செயல் திறன் அற்ற தலைமைகளால் இந்த முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி கொள்ளாவிட்டாலும், மெது மெதுவாக இந்த நலன்களை நோக்கி தான் எந்த ஒரு கூட்டமும் நகர்கிறது. இங்கே கனடாவில் ஒவ்வொரு தொழில் சங்கங்களும் மிக கவனமாக தங்கள் நலன்களை பேணி கொள்கின்றன. ஆசிரியர், போலீஸ், மருத்துவர் போன்ற தொழில் சங்கங்கள் மிக பலமானவை. தங்கள் நலனிற்கு எதிரான போக்குகளை மிக கவனமாக கையாள்கின்றன.

அதே போல பல வர்த்தக அமைப்புகள் தங்கள் வர்த்தக நலனிட்கேற்ற சட்டங்களை இயற்ற ஏராளமான பணத்தை செலவு செய்கின்றன. ஆங்கிலத்தில் இதை lobbying என்பார்கள்.

சமீபத்தில் அமெரிக்க கேபிள் வர்த்தகங்கள் மிக வெற்றிகரமாக நெட் neutrality என்ற ஒபாமா கொண்டு வந்த சட்டத்தை இல்லாமல் செய்து இருக்கிறார்கள்.

இது தான் நாம் வாழும் உலக நியதி. உன்னை நீ எப்படி பார்க்கின்றாய் என்பதை விட மற்றவர்கள் உன்னை எப்படி பார்கின்றார்கள் என்பது உன் வாழ்கையில் செல்வாக்கு செலுத்துகிறது.

நீ உன்னை சிறிலங்கனாக, இந்தியனாக, கனேடியனாக நினைத்து கொள்ளலாம். ஆனால் பலமுள்ளவன் இயற்றும் சட்டங்கள் உன்னை ஒரு தமிழனாக, தொழிலாளியாக பார்க்கும் போது நீ ஒரு தனி மனிதனாக அதில் இருந்து தப்பிக்க முடியாது.

இது கோபத்துடன் பாய்ந்து வரும் ஒரு காளை மாட்டின் முன்னே நின்று கொண்டு நான் இறைச்சி சாப்பிடுவதில்லை அதனால் அது என்னை முட்டாது என்று நினைப்பதற்கு ஒப்பானது.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது பழமொழி. நாம் எமக்கு நியாயமாக கிடைக்கவேண்டியதட்காக குரல் கொடுக்காவிட்டால் வேறு யார் அதை செய்யப் போகிறார்கள்?

இதை எல்லோரும் உணர்ந்து இருப்பதே சரியான திசையில் ஒரு படி.

 

One Response

Leave a Reply