தங்கள் தலையில் தாங்களே மண் கொட்டும் மனிதர்கள்

Hiding head in sand

ஒன்டாரியோ கனடாவின் சனத் தொகை கூடிய மாநிலம். கனடாவில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்டாரியோவிலேயே கூடுதலாக வாழ்கிறார்கள்.

கடந்து முடிந்த ஒன்டாரியோ மாநில தேர்தலில் மூன்று தமிழ் பிரதி நிதிகள் பழமை வாத கட்சி பிரதிநிதிகளாக மாநில அவை செல்கிறார்கள். இது ஒரு நல்ல செய்தி போல மேலோட்டமாக தெரிந்தாலும், எமது சமூகத்திற்கு பெரிய அளவில் இதனால் நன்மை எதுவும் வரப்போவதில்லை.

ஆட்சி கைக்கு வந்து சில வாரங்களிட்குள் பழமைவாத கட்சி கொண்டு வந்த மாற்றங்கள்  எமது சமூகத்திற்கு எந்த வகையிலும் நன்மை பயக்க போவதில்லை.

பொதுவாகவே பழமைவாத கட்சிகளின் கொள்கை வெளிநாட்டு குடியேற்றவாசிகளிட்கு எதிரானது. இதை அவர்கள் மறைக்க முயல்வது கூட இல்லை. பல தடவைகள் தேர்தல் காலங்களில் வெளிநாட்டு குடியேற்றவாசிகளிட்கு எதிரான விளம்பரங்களை பழமைவாத கட்சி வெளியிட்டு இருக்கிறது.

ஏன் தமிழர்கள் பெருவாரியாக பழமை வாத கட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழர்கள் மட்டுமல்ல மத்திய வர்க்க மக்கள் எவருமே பழமைவாத கட்சிக்கு வாக்களிப்பது தங்கள் நலனிற்கு எதிராக வாக்களிப்பது போல தான்.

ஒன்டாரியோ மாநில வருமானத்தில் ஏறத்தாள 70% ஆன அளவு கல்வி மற்றும் மருத்துவ செலவுகளிற்கு ஒதுக்கப்படுகிறது. தரமான இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் கீழ்த்தர/நடுத்தர வர்க்கத்தில் பிறந்த எவருக்கும் ஒரு வரப்பிரசாதம். தாங்கள் பிறந்த நிலையில் இருந்து தங்களை வாழ்வில் உயர்த்தி கொள்ள இந்த இரண்டும் மிக அடிப்படையான ஒரு காரணிகள்.

இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு சராசரி குடும்பம் $50,000 பெறுமதியான கல்வி சேவையை ஒவ்வொரு வருடமும் அரச செலவில் பெற்று கொள்கிறது.  ஏறத்தாள $12,000 வருட மருத்துவ காப்புறுதி செலவை இலவச மருத்துவம் இல்லாமல் செய்கிறது. இதற்கு மேலாக அரசு ஒவ்வொரு குழந்தைகளிட்கும் ஆக குறைந்தது $6,000 வை பணமாக கொடுத்து வருகிறது.

ஆக மொத்தத்தில் $74,000 பெறுமதியான சேவைகளை ஒரு மத்திய தர குடும்பம் அரசிடம் இருந்து ஒவ்வொரு வருடமும் பெற்று கொள்கிறது.

முதியவர்கள் உள்ள குடும்பத்திற்கு இது இன்னும் அதிகம். ஒரு முதியவர் $15,000 உதவி பணத்தை அரசிடம் பெற்று கொள்ள முடிகிறது.

எவ்வளவு வரிப் பணத்தை ஒரு குடும்பம் அரசிற்கு கொடுக்கிறது? கனடாவின் சராசரி குடும்ப வருமானம் $76,000, இவ்வளவு வருமானம் பெரும் ஒரு குடும்பம் ஏறத்தாள $20,000 ஐ வரியாக கட்ட வேண்டி இருக்கும்.

எண்கள் ஒரு போதும் பொய் சொல்வதில்லை. $20,000 வரியாக செலுத்தும் ஒரு குடும்பம் ஆக குறைந்தது $75,000 பெறுமதியான சேவைகளை அரசிடம் இருந்து பெற்று கொள்கிறது.

எங்கே இருந்து மிகுதி பணம் கிடைக்கிறது? வருமானம் கூட கூட வரி வீதம் அதிகரிக்கிறது. $500,000 உழைக்கும் ஒருவர் தனது வருமானத்தில் அரைவாசியை வரியாக கட்ட வேண்டி வரும்.

இங்கே தான் பழமைவாத கட்சியின் உண்மையான வாக்காளர்கள் வருகிறார்கள். பழமைவாத கட்சி வரி குறைப்பு என்று சொல்லும் போது அதுபணக்கார  வர்க்கத்திற்கான செய்தி.

$500,000 உழைக்கும் ஒருவர் ஏறத்தாள $ 287,438 ஐ வரியாக செலுத்த வேண்டி வரும். இந்த அளவு நன்மைகளை அரசிடம் இருந்து அவர்கள் பெற்று கொள்ள போவதில்லை. கல்வி, மருத்துவம் எல்லாம் தனியார் மூலம் பெற்று கொண்டாலும் இவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டிய தேவை இருக்காது.

பழமைவாத கட்சி பெருமளவு நிதியை நன்கொடையாக பெற்று கொள்வதற்கு இந்த வர்க்க பேதம் தான் மிக பெரிய காரணம்.

இந்த தடவை பழமைவாத கட்சி வரி குறைப்பு என்று தேர்தல் பரப்புரையில் சொன்ன பொது, எந்த ஒரு நடுத்தர வர்க்க மனிதனும் அதை நினைத்து மகிழ்ந்து இரூக்க தேவையில்லை. வரி குறையும் பொது சேவைகள் குறையும்,

இந்த தடவை பழமைவாத கட்சி ஆட்சி ஏறிய போது, அவர்கள் பெரிதாக எதையும் குழப்ப போவதில்லை என்று ஒரு நம்பிக்கை இருந்தது.

ஆனால் அவர்களது முதல் நகர்வுகளில் ஒன்று, தமக்கு வாக்களித்தவர்களின் கன்னத்தில் அறைந்தது போல அமைந்தது. $100 மில்லியன் அளவான பாடசாலை திருத்த நிதியத்தை நிறுத்தி இருந்தார்கள்.

இதை ஒரு சராசரி மனிதன் எவ்வாறு ஏற்று கொள்ள முடியும் என்று எனக்கு புரியவில்லை.

இதில் மிக வருந்த கூடிய விடயம், கடந்த ஆட்சியில் கொண்டு வந்த மாற்றங்கள் ஒரு சராசரி குடும்பத்திற்கு நன்மை பயப்பவை.
1. ஆக குறைந்த வருமானம் $14 ஆக கூட்டபட்டது.
2. 21 வயதிற்கு குறைந்தவர்களிட்கு மருந்துகள் இலவசமாக்கப் பட்டது.

இவற்றை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு இவர்கள் வாக்களித்த அரசு செய்த முதல் வேலை இவர்களது கல்வியிலேயே கை வைத்தது தான்.

இதை தவிர புதிய அரசு கொண்டு வந்த மற்றைய மாற்றங்கள் கூட எந்த விதத்திலும் சமூக நன்மை கொடுப்பவை அல்ல.

இதில் ஒரு ஆபத்தான போக்கை நான் பார்க்கிறேன்.  வெறும் வெற்று வார்த்தைகளால் மனிதர்களை தங்கள் நலனிற்கு எதிராக திருப்ப முடியும், தங்கள் தலையிலே தாங்களே மண் கொட்ட வைக்க முடியும் என்பது தான்.

 

Leave a Reply