நிழல் நிலத்தில் விழா கோயில்கள் , சனி கிரகம் நேரே நிற்கும் கோபுரங்கள் , புற்று நோயை குணமாக்கும் மூலிகைகள் என்று எம் முன்னோர் பெருமைகளை சொல்லும் பதிவுகள் இணையத்தில் பரவலாக வலம் வருகின்றன. மிக பலர் இதை மறு கேள்வி இன்றி அறுதியான உண்மையாக எடுத்து வாழ முற்படுகிறார்கள். படித்தவர்கள் கூட எந்த விதமான ஆதாரங்கள் இல்லாத இந்த கூற்றுகளை நம்பி மற்றவர்களிடம் எந்த வித தயக்கம் இல்லாமல் பகிர்ந்து கொள்கிறார்கள்.
விஞ்ஞானம், நவீன மருத்துவ முறைகளை நம்பாமல், மாற்று முறைகளை பின்பற்றும் போக்கு எமது சமூகத்தில் மட்டும் நடக்கவில்லை. சித்தர்கள், ஆயுர்வேத, சித்த வைத்திய முறைகள் எமது சமூகத்தில் என்றால் மேற்குலகில் ஹோமியோபதியும் இயற்கை வைத்தியமும் வந்து சேர்ந்துள்ளன. அண்மைய காலத்தில் கனடாவில் சில பெற்றோர்கள் நவீன மருத்துவதை புறக்கணித்து மாற்ற கூடிய நோய்கள் உள்ள தங்கள் குழந்தைகள் இறப்பிற்கு காரணமாய் இருந்துள்ளார்கள். [1] [2]
சமூக ஊடகங்களின் வளர்ச்சி தான் இந்த போக்கிற்கு பிரதானமான காரணமாக இருக்ககூடும். எவரும் எதையும் எழுத முடியும் என்ற நிலையில். அதை நம்ப தயாராய் இருப்பவர்கள் அது பரவ காரணமாய் இருக்கிறார்கள். Facebook இல் வருவது எல்லாம் உண்மை என்று எண்ணி, மற்றவர்களிற்கு நன்மை செய்வதாய் நினைத்து இந்த விடயங்கள் பகிரபடுகிறது.
எந்த ஒரு விடயத்தையும் எமது முன்னோர்கள் சொன்னார்கள் என்ற ஆதாரமில்லாத காரணத்திற்காக நம்புவர்கள், நம் முன்னோர் சொல்லி சென்ற அறிவுரை ஒன்றை மறந்து விட்டார்கள்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.
இயற்கையாக கிடைக்கிறது என்பதற்காக எதையும் கண்மூடி தனமாக ஏற்று கொள்ள முடியாது.அரிசியும், பருப்பும் விளையும் அதே நிலத்தில் மனிதரை கொல்ல கூடிய விச செடிகளும் வளரும். விஞ்ஞானம், ஆதாரங்களின் அடிப்படையில் செயல்படுகிறது.
இதில் சோகம் என்ன வென்றால், நவீன தொழில்நுட்பத்தை விமர்சிபவர்கள் அதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே அதை செய்கிறார்கள். எவரும் நவீன தொழில்நுட்பம் தரும் வசதிகளை விட்டு கொடுக்க தயாரில்லை. எவரும் மர உடை தரித்து, கிணறு வெட்டி, தாங்களே பயிர் செய்து, மண் குடிசையில் வாழ்ந்து, மாட்டு வண்டியில் பயணம் செய்து வாழ தயாராய் இல்லை. கடைசியாய் வந்த smartphone இல் instagram இல் தங்கள் நவீன வாழ்கையை பகிர்ந்து கொள்ளும் பலரே அடுத்த நிமிடம் ஏதோ ஒரு மூலிகையின் புற்று நோய் தீர்க்கும் குணத்தை பகிர்கிறார்கள்.
ஆதாரம் இல்லாத ஒரு விடயத்தை பகிரும்போது, ஒருவரும் யோசிப்பது இல்லை யாரோ ஒருவன் இதை உண்மை என நினைத்து ஒரு விபரீதமான முடிவை எடுக்க முடியும் என்று. மேலே எழுதியது போல எத்தனை குழந்தைகள், இந்த முட்டாள்தனத்திற்கு தங்கள் உயிரால் விலை செலுத்தி இருக்கிறார்கள்.
விஞ்ஞான வளர்ச்சி தான் இன்று எத்தனையோ கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவித்து இருக்கிறது. நவீன விவசாய முறைகள் பசியால் வாடும் மக்களின் எண்ணிகையை குறைத்து கொண்டு வருகிறது.
விஞ்ஞான வளர்ச்சியின் விளைவுகள் சில
1. போலியோ போன்ற கொடிய நோய்கள் இல்லாமல் போயுள்ளன
2. மக்கள் அதிக காலம் வாழ்கிறார்கள். 1960 களில் வெறும் 41 வயதாக இருந்த இந்திய ஆயுள் காலம் இன்று 68 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு எந்த ஒரு வாழ்க்கை தர அளவீட்டை எடுத்தாலும் விஞ்ஞான வளர்ச்சி மனித வாழ்வை சிறப்பாக்குவது வெளிப்படை.
அதற்காக எல்லாமே மிக சிறப்பாக நடப்பதாக நினைக்க வேண்டியதில்லை. கட்டுப்பாடற்ற கிருமி நாசினி பாவனை, புதிய மருந்து வகைகள் பரீட்சித்துப் பார்க்க இலகுவான சட்ட ஒழுங்கு முறைகள் ஆகியவை பணம் நோக்கு மட்டும் கொண்ட நிறுவனங்களால் அரசாங்ககள் அழுத்தம் கொடுக்கப்படுகின்றன.
உணவு இரசாயன பாவனை தொடர்பான விதிமுறைகள் இலகுவாக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக பன்னாட்டு நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இன்று உள்ள மருந்துகளால் அழிக்கப்பட முடியாத பக்டீரியா வகைகள் என்பது ஒரு பெரிய அபாயமாக உருவெடுத்து வருகிறது. அதே நேரம் கணிசாமான அளவு பணம் முக்கியமற்ற மருத்துவ ஆராயச்சிகளிட்காக வீணடிக்கப்படுகிறது.
இவை மனித குலத்திற்கு முன்னாள் உள்ள தீர்க்கப்பட வேண்டிய சில சிக்கல்கள். இந்த பண நோக்கம் மற்றும் சமூக சிந்தனை என்ற இரண்டு போக்குகளிட்கான யுத்தம் இன்று வரை எந்த ஒரு தரப்பும் வெற்றி கொள்ளவில்லை என்ற ஒரு சம நிலையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் அதற்கு தீர்வு இந்த நீண்ட அபிவிருத்தி பயணத்தை தூக்கி எறிந்து விட்டு பழைய காலத்திற்கு போவதல்ல. சரியான முறையில் அபிவிருத்தியை வழி நடுத்துவதே.
சில குணப்படுத்த முடியாத நோய்களின் தீர்வு சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இருக்க கூடும் என்ற சாத்தியத்தை மறுப்பதற்கில்லை. அப்படி ஒன்று இருக்குமானால் அதை முறையாக பரீசித்து சமூக நன்மைக்கு ஏற்ற வகையில் முன் வைப்பது அந்த மருத்துவ சமூகத்தின் கடமை. அதை விடுத்து எந்த வித ஆதாரங்களோ அடிப்படையோ இல்லாமல் சமூக ஊடகத்தில் பகிரப்படும் ஒன்றை சிகிச்சையாக எடுத்து கொள்வது ஆபத்தானது.
இந்த ஆரோக்கியமற்ற போக்கு தொடர்பாக பலர் கவனம் செலுத்தி வருவது, இந்த பதிவை வாசித்த போது தெரிந்தது. ஆஸ்திரேலியாவில் வாழும் சிலர் இது தொடர்பாக ஒரு அமைப்பையே உருவாக்கி இருக்கிறார்கள். இங்கே அது விரிவாக எழுதபட்டுள்ளது.
February 25, 2019 12:55 pm
Thank you for profiling our organisation. We would like to know more about you and your writings. When time permits, please get in touch via Facebook or email.