எவ்வளவு நம்பிக்கை இந்த சமூக ஒழுங்கில் அல்லது (ஒர்கனிக்)இயற்கை முறை உணவுப் பொருட்கள்

அண்மையில் ஒரு வீடியோ வாட்சப் வழியாக பார்க்க கிடைத்தது. ஒர்கனிக் உணவுப் பொருட்கள் விற்கும் whole foods என்ற பெரு நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் பெரும்பாலார் நம்புவதை போல ஒர்கனிக் அல்ல என்பது தான் அந்த செய்தியின் சாரம். அதற்கு அவர்கள் சொல்லும் பெரிய காரணம் அந்த நிறுவனம் பெரும்பாலான உணவுப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தான். சீனா போன்ற நாடுகளில் சட்டரீதியான ஒழுங்கு அமைப்புகள் குறைவு, அதுவும் ஒர்கனிக் உணவு பற்றிய வேற்று நாட்டு சட்டங்களை அவர்கள் எப்படி மதிக்க போகின்றார்கள் என்பது தான் கேள்வி.

அதற்கு அந்த செய்தி நிறுவனமே பதில் சொல்கின்றது இந்த உணவுப்பொருட்கள் ஒர்கனிக் என்பதை நம்ப முடியாது என்று.

அதில் ஓரளவு உண்மை இருக்கிறது தான்.

இந்த விடயம் பல தருணங்களில் பலருடன் விவாதித்த ஒரு விடயம். இந்த சமூக கட்டமைப்பின் உள்ள பல விடயங்களை போல இதற்கும் ஒரு உறுதியான பதிலை அளிக்க முடியாது.

இந்த சமூக ஒழுங்கில் நாம் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறோம் என்பதை வைத்து தான் இந்த விடயங்களில் ஒரு முடிவு எடுக்க முடியுமே தவிர, இது சரி பிழை என்று உறுதியாக கூறுவது கடினம்.

சாதாரணமாக நாம் செய்யும் விடயங்கள் சிலதை பார்ப்போம்.

– ஒரு நான்கு வயது பிள்ளையை பள்ளியில் விட்டு வருகிறோம்
– வெளியிடத்தில் உணவு வாங்கி உண்கிறோம்.
– மருத்துவர் சொல்லும் மருந்தை மருந்து கடையில் வாங்கி உண்கிறோம்.

இவை எல்லாம் எந்த வித பிழையும் நடக்காது என்ற நம்பிக்கையிலா செய்கிறோம். எவ்வளவோ தடவைகள் மேற்சொன்ன விடையங்களில் தவறுகள் நடந்து இருக்கின்றன. சில மணி நேரம் பராமரிக்க வேண்டிய குழந்தையை மெத்தனத்தால் சாகடித்த சம்பவங்கள் சில கனடாவிலே நடந்திருக்கிறது. மருத்துவர் விட்ட தவறால் இறந்தவர்கள், சுகாதாரமற்ற உணவை உண்டு உபாதைக்கு உள்ளானவர்கள் என்று தவறுகள் இருந்தாலும், இந்த சமூக ஒழுங்கில் நம்பிக்கை என்பது அதிகமாக இருப்பதாலே மட்டும் தான் இவற்றை கேள்வி பட்டாலும் அதே விடயத்தை செய்ய முடிகிறது, ஏன் எங்களால் வாழ முடிகிறது.

அதற்காக கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் நம்ப தேவையில்லை. பள்ளியால் வந்த மகனை கேட்டறிய முயற்சி செய்கிறோம், நாள் எவ்வாறு போனது என்று. சில நேரங்களில் இரண்டு மூன்று மருத்துவர்களிடம் கேட்டு ஒரு விடயத்தின் உண்மை தன்மையை உறுதி செய்ய முயற்சிக்கிறோம்.

அதற்கும் மேலாக இவை சரியான முறையில் வேலை செய்கின்றனவா என்பதை உறுதி செய்ய சட்டங்கள் இருக்கின்றன. உணவகங்கள், பாடசாலைகள், ஏன் அலங்கார நிலையங்களிட்கு கூட மாநகர விதிகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் ஏமாற்று வேலை என்று ஒதுக்கி வைத்து வாழ்வது கடினம்.

அதே போல தான் இதுவும். கனடாவில் ஒர்கனிக் உணவு என்று பொருள் விபர சீட்டில் போடுவதற்கு என்று சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்டத்தில் சில ஓட்டைகள் இருக்கின்றன என்பதும் உண்மை. ஆனால் ஒர்கனிக் என்று அங்கீகரிக்கப்பட்ட முத்திரை என்பதற்கு அர்த்தமே இல்லை என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட ஒர்கனிக் முத்திரை உள்ள பால், முட்டை அல்லது இறைச்சி என்பவை ஒர்கனிக் என்று நாம் நம்பலாம். ஏன்? இவை உள்ளூரில் உற்பத்தி செய்ய பட்டவை, உள்ளூர் நிறுவனங்களால் உறுதி படுத்தபட்டவை, எதுவும் பிழை கண்டுபிடிக்கபட்டால் அந்த நிறுவனங்கள் இழப்பது கூட. வேறு நிறுவனங்களை கை காட்டி தப்பிப்பது கடினம்.

ஆனால் வேறு ஒரு நாட்டில் உற்பத்தி செய்யபட்ட மா என்றால், அவர்கள் இதிலே தில்லு முள்ளு செய்ய கூடுதல் இடம் இருக்கும். இரண்டு நாடு சட்டவிதிகளை ஏமாற்ற வழிகள் கூட.

 

Leave a Reply